விதர்பாவின் விவசாயிகள் தற்கொலை இந்தியாவை உலுக்கிய சம்பவமாகும், ஆனால் சத்தீஸ்கர் மாநிலம் விவசாயிகளின் பிணக்காடாகிக்கொண்டிருப்பது நாம் அறியாதவை.
தெகல்காவில் சிரியா மோகன் எழுதிய நிதர்சனக்கட்டுரையை உங்களுக்குத் தருகிறோம்.
சத்தீஸ்கர் என்றாலே நக்சல்பரிகள் நிறைந்த இடம் என்று எல்லோராலும் பேசக்கூடிய நிலை, ஆனால் அதையும் தாண்டி கடந்த பத்து வருடங்களாக அங்கு விவசாயிகளின் தற்கொலை விதர்பாவை விட மோசமான நிலைமைக்கு வந்திருப்பது மிகக்கவனமாக மறைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற ஐந்து மாநிலங்கள், மக்கள் தொகையில் மூன்றில் ஒன்றாக இருக்கின்ற நிலையில், விவசாயிகள் தற்கொலையிலும் மூன்றில் ஒன்றாக இருப்பது அதிர்ச்சிக்குறியது. கடந்த 1997 முதல் 2007 வரை இந்தியாவின் மொத்த விவசாயிகளின் த்ற்கொலை எண்ணிக்கை 1,82,936 என்பது உள்துறை அமைச்சகத்தின் ஒரு அங்கமான தேசியக்குற்றப்புலனாய்வுப் பதிவின் (NCRB) அறிக்கை பதிவு செய்கிறது.
2001 சத்தீஸ்கர் தனிமாநிலமாகப் பிரிந்து வந்த பொழுது, அதே ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பின்படி 1452 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது விதர்பாவின் எண்ணிக்கையை விட அதிகமாகும், அதாவது ஒரு இலட்சத்தில் 7 விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள், அதே சமயம் மகாராஷ்டிரத்தில் இந்த எண்ணிக்கை நான்காக இருந்தது. இதைவிட மிகச்சரியாகக் கூறவேண்டுமானால் 1.5 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட சுடுகாட்டுத் தலைநகரமான விதர்பாவின் அளவும் சத்தீஸ்கரின் அளவும் ஏறக்குறைய ஓன்றுதான். இதுவரை எடுத்துள்ளக் கணக்கெடுப்பின்படி விதர்பாவில் மிக அதிகபட்சமாக 2006-ல் 1065 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆனால் சத்தீஸ்கரிலோ 2006-ல் 1483-ஆக இருந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டு 1593 ஆக உயர்ந்துள்ளது. ஆயினும் விதர்பாவின் உண்மை செய்தி ஊடகங்களில் வந்ததைப்போல் அல்லாமல் சத்தீஸ்கர் பற்றிய செய்திகள் திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது அல்லது மறுக்கப்பட்டுள்ளது.
இதுபோல ஒவ்வொரு மாநிலங்களிலும் விவசாயிகள் தற்கொலையை மொத்த மக்கள் தொகை சதவீதக்கணக்கில் ஆராய்ந்தால் கடந்த ஆறு ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலம் முதலிடத்தில் இருப்பது மிக பயங்கரமான செய்தியாகும்.இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை சராசரியாக ஒரு லட்சத்திற்கு 14 பேர். அதில் சத்தீஸ்கரின் மகாசமுந்த் மாவட்டதில் மட்டும் இந்தக் கொடூரம் 83 ஆக இருக்கிறது.
இதன் காரணமாக சத்தீஸ்கரின் மகாசமுந்த் மாவட்டதில் விவசாயிகள் தற்கொலையைப் பற்றிச் செய்திகள் சேகரிக்கச் சென்ற போது, தற்கொலை செய்துகொண்ட குடும்பங்களைக் கண்டுபிடிப்பதே ஒரு புதிராக இருந்தது.மகாசமுந்தில் உள்ள கோதாவரிகிராமத்தில் சந்தோஷ் நிஷாத்தின் வீடு இருளாகவும் காலியாகவும் இருந்தது.ஆனால் பாதி பக்கவாதததால் பாதிக்கப்பட்ட நிஷாத்தின் அப்பா பகதூர் சிங் மட்டும் இருந்தார். கூலி வேலைக்குச் சென்ற நிஷாத்தின் மனைவியும் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை.மூன்று குழந்தைகளும் கூட தங்களின் உயிரைத் தக்கவைத்துக்கொள்ள தினக் கூலியாகச் சென்றிருப்பது தெரியவந்தது.நிஷாத் ஒரு வருடத்திற்க்கு முன்பு பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவரின் சாவுக்கான காரணத்தை தந்தையிடம் கேட்டபொழுது “மொதல்ல எங்கள நிம்மதியா இருக்க விடுறீங்களா, என் அருமை மவன் எதுக்கு செத்தான்னு எனக்கு என்ன தெரியும், அவன் மண்டையில இருந்தது பற்றி எனக்கு எப்படி தெரியும்”என்று கோபம் கொப்பளிக்கப் பேசுகிறார். மேலும் “இதுவரைக்கும் எங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த நிவாரண உதவியும் வரல, எங்களுக்கு ரேசன் கார்டு கிடையாது, வறுமைக்கோட்டிற்க்கு கீழன்னு சொல்கிற அடையாள அட்டை கூட கிடையாது. ஒவ்வொரு நாளும் பச்ச வயிரை நிறைக்க நாயா அலைகிறோம், உங்ககிட்ட சொல்லியும் எந்த பிரயோஜனமும் இருக்காதுன்னு தெரிஞ்ச பிறகும் எதுக்காக உங்ககிட்ட பேசனும்” என்று தனது கோபத்தை ஆதங்கத்தோடு வெளிப்படுத்தினார். ஆனால் அந்த கோபம் சரியானது, மிக வலிமையானது, கூர்மையானது என்பது தெளிவாகத் கின்றது. ஐந்து வருடங்களுக்கு முன்பு சந்தோஷ் தனது முக்கால் வாசி நிலங்களைத் தனது தந்தையின் சிகிச்சைக்காக விற்றார், ஆனால் இன்றோ அரை ஏக்கருக்கும் குறைவாகவே நிலம் உள்ளது. குடும்பத்தில் விசாரித்த பொழுது அவர் யாரிடமும் கடனாளியாகக் கூட இல்லை என்பது தெரிகிறது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களோ,விவசாயத்தில் எதுவும் ஈட்ட முடியாத நிலையைக் கூறும்போதுதான் அவரின் சாவுக்கு காரணம் எது அன்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. இவரின் சாவையும் , விவசாயியின் தற்கொலை என்று பதிவு செய்யாமல் பொருளாதரக் காரணம் என்று காவல் நிலையம் பதிவு செய்து உண்மைக்காரணத்தை மூடி மறைத்துள்ளது.
பத்திரிக்கையாளர் சாய்நாத் தனது கட்டுரையில் விவசாயிகளின் சாவைக் கனக்கெடுப்பதில் அரசு மிகுந்த அளவில் தள்ளுபடி செய்வதைச் சுட்டிக்காட்டுகிறார். சாதாரனமாக பெண் விவசயிகளின் தற்கொலையை விவசாயிகள் பட்டியளில் சேர்க்காமல் அவர்கள் விவசாயியின் மனைவி என்றே அடையாளப்படுத்தப்படுகிறார்கள். (காலங்காலமாக நிலங்கள் பெண்களின் கைகளில் இல்லாதது இதற்கு முக்கிய காரணம்.) இதனால் எண்ணிலடங்கா பெண் விவசாயிகளின் தற்கொலை இந்தக் கணகெடுப்பின் போது நிராகடிக்கப்படுகிறது. மேலும் நிலங்கள் விவசாயியின் உறவினர்கள் பெயரில் இருந்ததாலும், குத்தைகைக்கு எடுத்திருந்ததாலும் பரிசீலிக்கப்படுவதில்லை.
சத்தீஸ்கரில் உள்ள விவசாய விஞ்ஞானியான சன்கெத் தாகூர் இதற்கான மூலகாரண்ம் பாசனம் பொய்த்து போனதே என்று கூறுகிறார். நெற்பயிரே மூலப்பயிராக இருக்கும் சத்தீஸ்கரில் உள்ள நிலங்களில் நான்கில் ஒன்று என்ற அளவில்தான் பாசனவசதி இருக்கிறது என்கிறார்.
மொத்த விவசாயிகளில் 75 சதவீதம் ஐந்து ஏக்கருக்கும் குறைவாக இருக்கும் சிறு விவசாயிளைக் கொண்டுள்ளதாகவும் கூறுகிறார். மேலும் பருவ மழை பொய்த்ததாலும்,உரங்கள் மற்றும் பூச்சிக்கொள்ளி மருந்துகளின் விலை உயர்வும் அவர்கள் தாக்கு பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைத் தெளிவுறக் கூறுகிறார்.அதனால் “குறைந்த மகசூலே தலையெழுத்து” என்று கூறி விவ்சாயிகள் தங்களது விதியை நொந்துகொள்வதாகக் கூறுகிறார்.ஒரு ஏக்கருக்கு 24 குவிண்டால் நெற்பயிரைக் கொடுக்கும் பஞ்சாப் மாநிலத்தைக் காட்டிலும், 6 குவிண்டால் விலைந்தாலே போதும் சமாளித்துக்கொள்ளலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகக் கூறுகிறார்.
மகாசமுந்தில் உள்ள எஸ்.பி யான ஆனந்த் சாப்ரே ” எங்கள் ஊரில் விவசாயிகள் தற்கொலை பற்றிக் கேள்விப்பட்டதில்லை, தற்கொலைகள் வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் அதை விவசாயிகள் தற்கொலை என்று சொல்ல முடியாது என்று கூறுகிறார். சத்தீஸ்கர் மாநிலத் திட்டக்கமிசன் துணைத் தலைவரும் கோபத்துடன் ” விவசாயிகள் எதற்கு தற்கொலை செஞ்சுக்கனும், இங்க எல்லாமே அளவுக்கு மீறி வெளையுது, கெடக்குது அப்புறம் எதற்கு தற்கொலை? அதுவுமில்லாம சத்தீஸ்கர்ல ஒரு விவசாயி கூட கடனாளி கிடையாது.” என்று கூறுகிறார்.
ஆனால் N.C.R.B-யின் கணக்கெடுப்பினைப் பற்றி அவரிடம் எடுத்துக் கூறிய போது ” இந்த கணக்கெடுப்பு யார்கிட்ட இருந்து எடுத்தாங்கன்னு தெரியல, ஒருவேளை தவறான நபர்களிடம் இருந்து கூட எடுத்திருக்கலாம். எங்களிடம் வந்து விசாரிங்க, நாங்க உண்மையான செய்தி தருகிறோம்,அப்ப உங்களுக்கு உண்மை என்னவென்று தெரியும் என்று சொன்னார். மேலும் உலகத்துக்கே அரிசியும், பருப்பும் கொடுக்கிற நாங்க எதுக்கு தற்கொலை செய்யனும் என்று பெருமிததுடன் கூறி முடித்தார்.2006ம் ஆண்டு விதர்பாவில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 1065,ஆனால் சத்தீஸ்கரிலோ அதன் எண்ணிக்கை 1483 ஆக இருக்கிறது.
இத்தகைய கொடூரமான சாவினைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள சில விவ்சாயக் குடும்பங்களைச் சந்திக்க நேர்ந்தது. மேலும் மகாசமுந்தில் உள்ள ஒரு விவசாயியின் சராசரி வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ளும் நோக்குடன் பாக்ரா என்ற இடத்தில் உள்ள 40 வயதான சத்ருகன், அவரின் மனைவி மற்றும் 5 குழந்தைகளைச் சந்தித்தோம். ஏழு ஏக்கர் மதிபுள்ள அவரின் நிலத்தில் அரிசி மற்றும் உளுந்து பயிரிடப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னர் தான் தன் மூத்த மகளின் திருமணத்தையொட்டி 3 ஏக்கர் நிலத்தை 2.5 லட்சத்திற்கு விற்றிருக்கிறார்,அதனால் தற்பொழுது அவர்கள் விளைவிப்பது தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ளவே போதுமானதாக இருப்பதால்
வேறு எதையும் விற்கமுடிவதில்லை, மேலும் தற்பொழுது அவர்களால் சந்தைகளில் விற்கும் எந்தப் பருப்பையும் வாங்க முடிவதில்லை. இதுபோக சத்ருஹனுக்கு மேலும் 4 மகள்களைத் திருமணம் செய்து கொடுக்கும் கடமை இருக்கிறது, இதற்காக மீதி இருக்கும் நிலங்களையும் விற்றால் குடும்பைதின் எதிர்காலம் கேள்விகுறிதான். சத்ருஹனின் இதே நிலைதான் அங்கு இருக்கும் மற்ற விவசாயிகளின் நிலையும், இதனால் இவர்கள் ஊட்டசத்து இல்லாமல் நோஞ்சான் களாக மாறிவருகிறார்கள்.
பிறகு பக்கத்து வீட்டில் இருக்கும் பகிரத்தின் வாழ்நிலையை விசாரித்ததில் அது மிகவும் பரிதாபகரமானதாக இருந்தது. காலங்காலமாக விவசாய நிலமேதும் இல்லாததால் இவரின் குடும்பம் 40 ரூபாய் சம்பளத்திற்கு தினக்கூலியாக விவசாய நிலங்களிலும், கட்டுமானத்தொழிலிலும் ஈடுபடுகின்றனர். தற்பொழுது தனது மகளின் கல்யாணத்திற்காக 50000 ரூபாய் கடணாகப் பெற்றுள்ளார். முழுமையாக ஆண்டு வருமானம் 30 ஆயிரம் கூடத் தாண்ட முடியாத நிலையில் 50000 ரூபாய் மொத்தமாக தர யாரும் முன்வரவில்லை, அதனால் கொசுறு கொசுறாக 5 பைசா வட்டிக்கு பலரிடம் கடன் வாங்கியுள்ளதாக கூறினார். மேலும் வருமானத்திற்காக இரண்டு ஏக்கரைக் குத்தகைக்கு எடுத்துள்ள அவர், விளைவதில் எட்டு குவின்டாலை வாடகையாகக் கொடுத்து விடுகிறார், மீதியை தான் தன் குடும்பத்திற்கு எடுத்துக்கொள்கிறார். ஆனால் அதுவும் அவருக்கு போதுமானதாக இருப்பதில்லை. பருவமழை பொய்த்துப் போகும் காலங்களில் கூட அவர் வாடகையாகவோ, பணமாகவோ அல்லது தாணியமாகவோ எதிர்வரும் காலங்களில் சேர்த்துக்கொடுக்கும் அவலநிலைக்குத் தள்ளப்படுகிறார். ஒருவருடம் சம்பாதிக்கும் தொகை வட்டியைச் செலுத்தவே சரியாக இருப்பதால் இவர்கள் தினசரி வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது. அடுத்தவருடம் புதிதாகக் கடன் கொடுப்பவர் மாறுவார். ஆனால் வட்டியாகக் கொடுக்கும் பணத்தின் மதிப்பும், வாழ்நிலையும் என்றும் மாறப்போவதில்லை.
மஹாசமுந்த் மாவட்டம் முழுக்க விவசாயிகளின் நிலை இதுதான். பண்ணையார்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்கி கொள்ளவும், ஆடம்பரமான வாழ்க்கை வாழவும், தங்கள் நிலங்களை விவசாயிகளிடம் குத்தகையாகக் கொடுக்கின்றனர். வியர்வையே சிந்தாத இவர்கள், இரத்தத்தையே வியர்வையாக சிந்தும் விவசாயிகளைக் கசக்கிப் பிழிவது கண்கூடாகத் தெரிகிறது.
ஆண்டாண்டுகளாக ஆயிரமாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து பிணக்குழியில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் ஒரு ரகசிய உடன்படிக்கைப் போல இந்த விஷயம் வெளியுலகிற்க்குத் தெரியாததன் காரணத்தைப்பற்றி பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில், “முதலாவதாக உள்ளூர் ஊடகங்கள், இத்தகைய செய்திகளால் எத்தகைய பலனும் பெறாத நிலையில் இருப்பதால் அவற்றை வெளியிடத் தயார் நிலையில் இல்லை”, “இரண்டாவதாக பத்தி ரிக்கையாளர்களோ மாநிலத்தின் இத்தகைய இக்கட்டான சூழ்நிலையைப் பற்றிச் சொல்ல ஊக்கப்படுத்தப்படுவதில்லை”, “கடைசியாக விதர்பாவில் விவசாயிகள் நலனுக்காக குரல் கொடுக்கும் மற்றும் போராடும் இயக்கமான விதர்பா சேட்கரி சங்கதன் போல ஒரு வலுமையான இயக்கம் இங்கு இல்லாதது பெரும் பின்னடைவுக்குக் காரணம்.”
2008-ல் கணக்கெடுப்பு அடுத்தமாதம் வெளியாகவுள்ள நிலையில், இதைப்பற்றி மாநில அரசு கவனிக்காவிடில் இந்நிலை மேலும் உயர்ந்து மாநிலமே மிக அபாயகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் என்றும் N.C.R.B -வின் குழு வருத்தப்பட்டுச்சொல்கிறது.
இத்தனப் பொணம்னு தெரிய இன்னும் எத்தனப் பொணம் விழனுமோ!! என்கிற பாப் டைலனின் பாடல் சத்தீஸ்கருக்கு மிகவும் பொருந்தும்.