நுகர்தலே இன்பம், நுகர்தலே பெருமை, நுகர்தலே இம்மை, நுகர்தலே மறுமை – நுகர்தல்! நுகர்தல்! நுகர்தல்! நுகர்தல் இல்லையேல் சாதல்!
நுகர்தலே இன்பம், நுகர்தலே பெருமை, நுகர்தலே இம்மை, நுகர்தலே மறுமை – நுகர்தல்! நுகர்தல்! நுகர்தல்!
நுகர்தல் இல்லையேல் சாதல்!
நாய்களுக்கு உணவு வகைகளை உற்பத்தி செய்யும் பெடிக்ரீக்கு நாய்கள் மீது உண்மையான அக்கறையா என்ன?
தனி நபர் நுகர்வு என்பது ஒரு வெறி பிடித்த நுகர்வாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை சொல்லவே இது போன்ற சொல்லாடல்களை நாம் உபயோகிக்க வேண்டியுள்ளது. அன்றாடத் தேவைகளுக்கு எது நன்றாக இருக்கும் என்பதை அப்பொருளின் உபயோக விளைவைப் பார்த்து தெரிவு செய்யும் நிலையில் இருந்து, விளம்பரங்களில் போடுவதையெல்லாம் வாங்க வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் மாறி விட்டனர் என்பதனாலேயே இதை ஒரு வெறி என்று சொல்லுகிறோம்.
இந்தியாவில் இத்தகைய நுகர்வு சந்தைகள், அனைத்து மக்களையும் கவரும் விதமாக மாறி வருவதற்கு ஊடகங்கள் செய்யும் நயவஞ்சக விளம்பரங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன, சமீப காலங்களில் தொலைக்காட்சிகளிலும், வானொலிகளின் பண்பலை நிகழ்ச்சிகளிலும் இது போன்ற விஷம விளம்பரங்களின் ஆதிக்கம் என்பது நடுத்தர வர்க்க மக்கள் மட்டும் அல்லாமல் குடிசை வீடுகளையும் ஆட்டிவைக்கத் தொடங்கிவிட்டது. வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கி ஒன்று ”கடன் வாங்குங்கள் பெருமை கொள்ளுங்கள்” என்று விளம்பரம் செய்கிறது. மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவையை மீறி அதிகமாக கடன் வாங்குவதும், திருப்பி அடைக்கும் திறன் இல்லாவிட்டால் கூட கடன் வாங்குவது என்பது வருத்தப்படக் கூடிய ஒன்றல்ல என்பது போன்ற மாயையை இத்தகைய விளம்பரங்கள் உருவாக்குகிறது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்பதெல்லாம் போய் நிச்சயமாகப் பரிசு உண்டு!, இங்கு வாங்கினால் உங்கள் பணத்தை சேமிக்கலாம்! போன்ற விளம்பரங்கள் ஏழைப் பாழைகளை வசீகரிக்கும் சொற்களாகிவிட்டன. இது ஏதோ நம் மீதான கரிசனத்தில் அல்ல, அவனது பொருளை வாங்க வைத்து மேலும் மேலும் பொருள் சேர்ப்பதற்கான ஆசைகளைத் தூண்டுவதற்கே என்பதை மக்கள் உணர்வதில்லை. இது மட்டுமல்லாமல் நேர்த்தியான, கவர்ச்சியான பேக்கிங்குகள் கொண்டு விளம்பரப்படுத்தப்படும் பொருட்களே சுத்தமாகவும், உடம்பிற்கு தீங்கு விளைவிக்காமலும் இருக்கும் என்று அவர்களை அறியாமலேயே மனதில் பதிய வைக்கப்படுகின்றன.
கோக், பெப்சி போன்ற மேல்நாட்டு குளிர்பாண நிறுவனங்கள், சினிமா நட்சத்திரங்களை வைத்து எடுக்கும் மிகப் பிரம்மாண்டமான விளம்பரங்கள் மூலம், இந்தியா முழுக்க டீலர்கள் அமைக்கப்படுகிறார்கள். மேலும் சிறு வியாபாரிகளைக் கவருவதற்கு ஐஸ் பாக்ஸ், டீ சர்ட், பள பளக்கும் விளம்பரச் சுவரொட்டிகள் போன்ற ஜிகினாப் பொருள்களை இலவசமாக வழங்குவதால் கவரப்பட்டு கிராமங்களின் சாதாரணமான குக்கிராமங்களில் கூட இவற்றை வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சோப்பு, பேஸ்ட் முதல் நாப்கின்கள் வரை டி.வி க்களில் வரும் விளம்பரங்களை வைத்து வாங்கும் நிலையே இன்று கிராமங்களில் அதிகரித்துள்ளது.
தங்கள் தேவைக்கு அதிகமாக சம்பாதிக்கும் ஐ.டி துறையில் வேலை பார்க்கும் இளைஞர்களும் இதற்குப் பெரும்பாலும் பலியாகின்றனர். முக்கியமாக இளைய தலைமுறையினரைக் குறிவைத்து தயாரிக்கப்படுகின்ற இத்தகைய விளம்பரங்கள், காலணிகள் என்றால் உட்லான்ஸ், ரீபொக் அல்லது அடிடாஸ், ஆடைகள் என்றால் ஏரோ, ஆலன் சோலி, லூயி ஃபிலிப், சோடியாக், கலர் ப்ளஸ் அல்லது க்ரொகடைல், கைக்கடிகாரங்கள் என்றால் ரோலக்ஸ், ஒமெகா அல்லது ரேடோ போன்ற தயாரிப்புகள் தான் தரமானவை என்று அவர்களை அறியாமல் மனதில் புகுத்தப்படுகின்றது. சந்தையில் புதிது புதிதாக அறிமுகப்படுத்துகிற இரு சக்கர வாகனங்களுக்கான கவர்ச்சிகர விளம்பரங்கள், தேவைக்குதான் வாகனங்கள் என்பதிலிருந்து பந்தா காட்டவும், படாடோபத்திற்குமான ஒரு சின்னமாக மாற்றப்பட்டுவிட்டது. சமீபத்தில் இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் போன்ற வாகனங்களின் அறிமுகம் இதற்கு சிறந்த உதாரணம். நாற்பது முதல் ஐம்பதாயிரம் வரையிலான இரு சக்கர வாகனங்கள் போய் ஏழு முதல் ஐம்பது லட்சம் வரையிலான ஹார்லி டேவிட்சன் வகையிறா வாகனங்கள் இந்திய சந்தையை ஆக்கிரமித்து வருகின்றன என்பதில் பெருமிதம் கொள்ளலாம்.
மேலும் அட்சய த்ரிதியை அன்று நகை வாங்கினால் நகை சேர்ந்து கொண்டிருக்கும் என்ற மூடப்பழக்கத்தை, பார்ப்பனர்கள் மூலமாக ரேடியோவிலும், தொலைக்காட்சியிலும் கூறவைத்து மக்களை மேலும் வாங்குவதற்கான ஆசையை தூண்டுவதே இவர்களின் முக்கிய இலக்காக உள்ளது. இதன் மூலம் மக்களை ஓட்டாண்டியாக்குவதோடு, இத்தகைய விளம்பரங்கள் மூலம் ஒரு பொருளை வாங்குவதற்காக கொலையும் செய்யலாம் என்பதைப் போன்ற மனோபாவத்தை உருவாக்குகிறது..
இது போன்று தேவைக்கு அதிகமாக வாங்கவைத்து கடனாளியாக்குவதற்கே இத்தகைய விளம்பரங்கள் இறக்கை கட்டி பறந்து வருகின்றன. எதுவெல்லாம் குடும்பத்தை, இச்சமூகத்தை சீரழிக்கக் கூடியதோ அதையெல்லாம் நியாயப்படுத்துவதற்காகவே இன்றைய விளம்பரங்கள் மக்களிடம் காற்றை விட வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. நுகர்பவனை வேறு எதைப் பற்றியும் சிந்திக்க விடாமல் ஆட்டு மந்தைகளாக மாற்றி தாங்கள் நினைத்தவற்றை சாதித்துக்கொள்ளும் வேலையை இத்தகைய விளம்பரங்கள் கச்சிதமாகச் செய்து முடிக்கின்றன. மக்கள் தாங்கள் ஒரு மாதம் சம்பாதிப்பதை பெரும்பாலும் நுகர்வதற்கே அதிகபட்சமாக செலவிடும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் கடன் வாங்கி அடைக்க முடியாமல் திணறுவதும், குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள், குழப்பம் நிலவவும் முடிவில் அது ஒட்டுமொத்த குடும்பத்தையே பிரித்துவிடும் நிலைக்கோ அல்லது தற்கொலைக்கு தூண்டும் விதத்திலோ கொண்டு போய் விடுகிறது.
ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் போடுகிற வாசணை திரவியங்கள் அல்லது அவரால் விளம்பரப் படுத்தப்படுகிற பொருட்கள், வெளிநாடுகளில் என்று சந்தை படுத்தப் படுகின்றதோ அதே தேதியில், அதே நேரத்தில் இந்தியாவிலும் அறிமுகப் படுத்தப்படுகின்றது, அது போல ஹாரி பார்ட்டர் புத்தகங்களும் உலகம் முழுவதும் ஒரே நாளில் அறிமுகப்படுத்தப்படுவதும் அப்புத்தகங்கள் அவர்களால் படிக்கப் படுகிறதோ இல்லையோ முதல் நாளே வாங்கிவிடுவது போன்றவை, மிகப்பெரிய கௌராமாகப் பார்க்கப்பட்டு, பெருமிதம் கொள்ளும் மனோபாவமும் மேல்தட்டு வர்க்கத்திற்கு ஏற்படுகிறது. இதன் மூலம் உலகளவில் புகழ் பெற்ற பொருள்களை வெறி பிடித்து நுகர்வதால் இந்த சமூகம் அவர்களை மதிப்புடன் பார்ப்பதாகவும் நினைக்கிறார்கள்
1990 கள் வரையில் இந்தியாவில் இருந்த மொத்த ஷாப்பிங் மால்கள் எனப்படுகிற மிகப்பரிய வணிக வளாகங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் அனால் இந்தியப் பொருளாதாரம் உலகச் சந்தைக்கு திறந்துவிடப்பட்ட பிறகு அவற்றின் வளர்ச்சி கற்பணை செய்ய முடியாத நுகர்வுவெறிக்கு இட்டுச் சென்றுள்ளது. மேலும், இவ்வகை நுகர்வு வெறி நமது உண்ணும் முறையிலும் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்துகின்றன. இத்தகைய மால்களில் உள்ள மெக் டொனால்ட், கெ.எஃப்.சி, சான்ஸ் கிட்சென், வேன்க்ஸ் கிட்சென், பீசா ஹட், பதான்கோட், காஃபி டே போன்ற மேல்தட்டு உணவகங்கள் வானொலி, தொலைகாட்சிகளில் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு அவற்றை உண்ணும் வெறியை ஏற்படுத்துகிறது.
தனி நபர் நுகர்வு வெறிக்கு மூலம், இந்திய அரசால் 1991ல் கொண்டு வரப்பட்ட தனியார்மய, தாராளமய உலகமய சித்தாந்தத்தைக் கொண்ட காட் (GATT) ஒப்பந்தமே ஆகும். உலகிலேயே மிகப் பெரிய சந்தை, எதை சொன்னாலும் நம்பக் கூடிய அடிமை புத்தி கொண்ட மக்கள், வெளி நாட்டுப் பொருள்கள் என்றால் தரம் அதிகமாக இருக்கும் என்ற கற்பிதங்கள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் காலாவதியான தொழில் நுட்பத்தையும் தொழில்நுட்ப சாதனங்களையும் இன்னபிற கண்ட கண்ட கழிசடைகளைக் கூட மூன்றாம் உலக நாடுகளில் விற்று காசாக்கலாம் என்ற ஏகாதிபத்தியக் கண்ணோட்டம் போன்றவை தங்கள் சமஸ்தான சந்தைகளை அமைக்க சாதக அம்சங்களாக மேலை நாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன. இது போன்ற தனி நபர் நுகர்வை சமூகத்தில் ஒரு கவுரவமான செயலாகவும் அதிகமாக நுகர்பவனை மதிப்பு மிக்கவனாகவும் இச்சமூகமும் முதலாளித்துவ உலகமும் காட்டமுனைகிறது. அதிகமாக நுகர்தலே நிம்மதி, அதிகமாக நுகர்வதே பெருமையான விஷயம், புதிது புதிதாக வித விதமாக நுகர்தல், போன்றவை நுகர்தலை போதை வஸ்துவாகவே மாற்றி ஒருவித மயக்க நிலைக்கு மக்களை கொண்டு செல்கிறது.
இது ஏதோ மிகப் பெரிய சமுதாயப் பொருளாதார புரட்சி என்றும், மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துவிட்டது, யாரும் முன்னைப் போல பரம ஏழைகளாக இல்லை என்றும் சொல்பவர்கள் ஒன்றை உணர வேண்டும் இது போன்ற சந்தைகள் யாருக்கானதாக இருக்கிறது, யார் நுகர்வதற்காக வந்துள்ளது ? இது தினம் தினம் பட்டினியால் செத்து மடியும், நோஞ்சான்களாக இருக்கும் இந்தியக் குழந்தைகளின் பட்டினியை போக்குவதாக இருக்கிறதா? எலிக்கறி, நச்சுக் கிழங்குகள் தின்று தங்கள் பசியை ஆற்றிக்கொள்ளும் விவசாயிகளின் பட்டினியினைப் போக்குவதாக உள்ளதா? மக்கள் தொகையில் 30 கோடி பேர் தினமும் உறங்கச் செல்லும் முன் வயிற்றில் ஈரத்துணி கட்டிக் கொள்ளும் ஏழைப் பாழைகளின் பசியை போக்குவதாக உள்ளதா? இல்லையே, அவர்கள் ஏன் இது போன்ற நிலைக்குத் தள்ளப்படுள்ளனர், வாங்கும் திறனே இல்லாத நிலைக்கு அவர்கள் மாறியது எதனால், மாற்றியது எது? ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான வித்தியாசம் மிக அதிகமாகிவிட்ட நிலையில், இவை எல்லாவற்றிற்கும் காரணம் அரசு கொண்டுவந்த தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற நாட்டை மறுகாலணியாக்கும் கொள்கைகள் தாம் என்பது உறுதி.
.
This entry was posted on ஜனவரி 6, 2011 at 8:44 பிப and is filed under அடிடாஸ், உட்லான்ஸ், எலிக்கறி, கடன், கிறுக்கியது, சந்தை, தனி நபர் நுகர்வு, நச்சுக் கிழங்குகள், நயவஞ்சக விளம்பரங்கள், நுகர்தல், பகுக்கப்படாதது, மறுகாலணி, மாயை, ரீபொக், ரோலக்ஸ், வாங்கும் திறன், ஹார்லி டேவிட்சன், GATT, SOCIAL ISSUES with tags கடன், சந்தைகள், நயவஞ்சக விளம்பரங்கள், நுகர்தல், பார்ப்பனர்கள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
ஜனவரி 6, 2011 இல் 8:50 பிப
TEST
ஜனவரி 7, 2011 இல் 1:21 பிப
Good post..
ஜனவரி 7, 2011 இல் 2:53 பிப
ப்ரண்ட் கு என ஒரு குவாலிட்டி இருக்கத்தான் செய்கிறது லூயேஸ் பில்லிப் ஷர்ட், லெவிஸ் ஜீன்ஸ் ,வுத் லேன்ட் சூ ,
அதற்காக கடன் வங்கி அதை அணிவது தவறுதான்
ஜனவரி 7, 2011 இல் 7:24 பிப
Good post