ஐ.ஐ.டி பொலிகாளைகளும் ‘மலட்டு’ச் சமூகமும்!


சென்னையச் சேர்ந்த தம்பதியினர் தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள செயற்கைக் கருவுறும் முறைக்குச் செல்லவிருப்பதால், தகுதியுள்ள விந்தணு தானம் செய்பவரைத் தேடி வருவதாக ஊடகங்களில் விளம்பரப்படுத்தியுள்ளனர். தகுதியான என்றால்………?

ஆரோக்கியமான, புகை மற்றும் இதர கெட்டப் பழக்கங்கள் இல்லாத முடிந்தால் அழகான, வெள்ளையான, உயரமான  ஐ.ஐ.டி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் போன்ற நிபந்தனைகளைகளை விதித்துள்ளனர். விரைவிலேயே இச்செயற்கைக் கருவுறுதலை செய்யவிருப்பதால், அன்பும் செழிப்பும் பொங்கித் ததும்பவிருக்கும் தங்களது வாழ்க்கையைத் தொடங்க அவசரமாக விந்தணு தானம் தேவை என்றும் கூறியுள்ளனர். (மதிப்பெண்கள் (CGPA) மற்றும் வேலைக்குச் செல்லும் நிறுவனத்தையும் நிபந்தனையாக வைக்க மறந்து விட்டனரோ). இதற்காக தானம் செய்யும் அனைத்து அம்சங்களும் பொருந்திய ஐ.ஐ.டி பொலிகாளைக்கு  20,000 ரூபாய் தரவிருப்பதாகவும் விலை நிர்ணயித்துள்ளனர்.

படிப்பதற்கு நாராசமாக இருந்தாலும், இது போன்ற விஷயங்கள் சமூகத்தின் பிற தளங்களிலும் பிரதிபலிக்கின்ற காரணத்தால், அது விளைவிக்கவிருக்கும் அபாயத்தையும் இங்கு பரிசிலிக்க வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு குழந்தையில்லாத் தம்பதியினர் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் போது கூட பல நிகழ்ச்சி நிரல்களை அல்லது பிற்போக்குத்தனங்களை மனதில் நிறுத்தியே தங்கள் கோரிக்கையை அமல்படுத்துவதற்கு உடன்படுகின்றனர். தத்தெடுப்பதற்கு அவர்களின் சொந்த சாதியிலேயே பிறந்த குழந்தை அல்லது சமூகக் கட்டுமானத்தில் அவர்களுக்கு மேலிருக்கிற சாதியில் பிறந்த குழந்தை, நோய் நொடியில்லாமல் அங்க பாதிப்பெதுவும் இல்லாத குழந்தை போன்றவையே பிரதான கோரிக்கையாயிருக்கின்றன.

குறிப்பாக இவர்கள் வைக்கிற  முக்கியமான நிபந்தனைகள், தத்தெடுக்கப்படும் குழந்தைகள் கண்டிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பிச்சைக்காரர்கள் அல்லது தெருவோரங்களில் வசிப்பவர்களுடையதாக இருக்கக் கூடாது என்பதே, இதற்கு அவர்கள் வைக்கிற வாதம் அக்குழந்தைகளைத் தத்தெடுத்து தத்தம் குடும்பச் சூழ்நிலைகளில் வளர்த்தால் கூட அது தனது இரத்த உறவின் சாதிய குணநலன்களையே கொண்டிருக்கும் என்பதே. ஆக சாதியின், வர்க்கத்தின் மேல்நிலையில் உள்ளவர்களே அதிக அறிவைக் கொண்டவர்களாகவும், ஒழுக்கச் சீலர்களாகவும் இவர்களால் முன்னிறுத்தப்படுகிறது.

மேலும் இவர்கள் பெண் குழந்தைகளை தத்தெடுப்பதையே வழக்கமாகக்  கொள்கின்றனர். இது தத்தெடுத்தவர்கள் இறுதிக் காலங்களில் ஆண் குழந்தைகளை அண்டி வாழ வேண்டிய நிர்பந்தம் வந்துவிடும் என்ற பயத்தினாலும், பெண் என்றால் கல்யாணம் ஆனவுடன் சென்றுவிடுவார்கள், சட்டப்படி சொத்துரிமை கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தினாலும் விளைந்ததே. ஆக எக்காலத்திலும் சொந்தக் குழந்தையானாலும், தன் பொருளாதார, சாதி நலன் சார்ந்தே முடிவெடுக்கிறார்கள். சீரழிந்து வருகிற ஒரு சமூகம் தான் விரும்பும் வாழ்க்கைக்கான விழுமியங்களை எத்தகைய விலை கொடுத்தேனும் தக்கவைத்துக் கொள்ளத் தயங்காது என்பதற்கான ஆதாரமே இது.

இதற்குச் சற்றேதும் குறைவில்லாத விழுமியங்களுடன் கொண்ட விளம்பரத்தைத்தான் அத்தம்பதியினரும் கொடுத்துள்ளனர். மேற்கொண்டு இச்செய்தியை அறிவியல் கொண்டு பார்த்தால்………… விளம்பரத்தில் கோரியுள்ளபடியே அத்தம்பதியினர் தாங்கள் விரும்பிய ஐ.ஐ.டி பொலிகாளைகளின் விந்தைப் பெற்று, செயற்கை முறையில் கருவுறுதல் மூலம் குழந்தை பிறந்தால் கூட அக்குழந்தை வளர்ந்து அதன் இலக்கை அடைய முடியுமா என்பது நிச்சயமற்றது.

ஏனெனில் சிந்தனை, செயல் மற்றும் வாழ்வு போன்றவை அவரவர் வாழும் புறச்சூழலைப் பொருத்தே அமையும். அதன் தாக்கமே ஒருவர் பகத்சிங்காக மாறுகிறாரா அல்லது எட்டப்பனாக மாறுகிறாரா என்பதை முடிவு செய்யும். அது ஒவ்வொருவரும் தாங்கி நிற்கும் மரபணுக்களைப் பொருத்து அமைய எள்ளளவும் வாய்ப்பில்லை. மரபணுக்கள் மூதாதையரின் உடல் கூறுகளின் தன்மைகளான நிறம், கண்ணின் கருவிழி, உடலின் வாகு போன்றவற்றைத் தான் கடத்தும். அன்றி, கருத்து, சிந்தனைக் கூறுகளை அல்ல.  ஆகையால் அது அப்துல் கலாம் விந்தணுவாக இருந்தால் கூட பிறக்கும் குழந்தை அவரைப் போன்று காமடி அறிவாளியாகப் பிறக்கும் என்பது அறிவீனம். இருந்தும் தற்போது நிலவுகிற சமனற்றச் சமூகத்தில் பெருஞ்சுயநலமிக்க பெற்றோர்களின் வளர்ப்பாலும், அவர்களால் ஊட்டப்படுகின்ற சமூகத்தைப் பற்றிய கருத்தோட்டங்களாலும் வளர்ந்து வருபவன் சுயநலம் மிகுந்த பிழைப்புவாதியாக மாறவே வாய்ப்புள்ளது. அரிதும் அரிதான வாய்ப்புகளில் மட்டுமே இவர்கள் சமூகப் பிரக்ஞையுள்ளவர்களாக மாற இயலும். இதுவும் அத்தகைய அரசியல், தொடர்பு, இயக்கங்கள், மூலமே சாத்தியம். ஆக பிறக்கப் போகும் குழந்தையின் திறனை விந்தணுக்களின் மூலம் நிர்ணயிப்பதென்பது அறிவீனம்.

ஐ.ஐடி மாணவர்கள் மட்டுமே வேண்டும் என்பது, அவர்கள் நன்றாகப் படிக்க கூடிய நல் விழுமியங்களைக் கொண்டுள்ளவர்கள் என்பதைத் தாண்டி பெரும்பாலானவர்கள் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இப்படி மறைமுகமாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இது சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு விடப்படும் என்ற பார்ப்பன மேட்டிமைத்தனமின்றி வேறல்ல.

தங்கள் பேச்சு முதல் நடை, உடை, பாவனை, உணவுப்பழக்கம், சாங்கியம் பார்த்தல் வரை அனைத்தையும் பார்ப்பனர்களைப் போலவே (இன்னும் சொல்லப் போனால் அவர்களை விட ஒரு படி மேலே) செய்து கொண்டிருக்கும் பெரும்பான்மையான நடுத்தர வர்க்கப் பெற்றோர்களின் சிந்தனைச் சொரிதலால் வந்த குழந்தையே இது போன்ற விந்து விருப்பம். ஐ.ஐ.டியனர் ஏதோ இயற்கையிலேயே அறிவுச் செழிப்புடன் பிறந்தவர்கள் போலவும் மற்றவர்கள் இவையெதுவும் இல்லாததால்தான் மற்ற கல்லூரிகளில் படிப்பதாகவுமான ஒர் கருத்து இவ்விளம்பரத்தின் மூலம் பிதுங்கி வருவதைக் காணலாம்.

நடுத்தர, மேல்தட்டு வர்க்கப் பெற்றோர்கள் குறிப்பாக பார்ப்பன பனியா சாதிகளைச் சேர்ந்தவர்கள் சிறுவயதில் இருந்தே தங்கள் குழந்தைகளுக்கு ஐ.ஐ.டி கனவுகளை ஊட்டி அதற்குத் தேவையான பாடங்களை எந்திரகதியில் மனதில் உருவேற்றிவிடுகிறனர். மாணவர்களுக்கோ சிறு வயது முதல் வாழ்வின் அத்துனை அம்சங்களையும் இழந்தாலும் ஐ.ஐ.டி ஒன்றே வாழ்க்கை போன்ற என்ணங்கள் மனதில் பதிய வைக்கப்படுகிறது. தேர்வுகளில் தான் விழுங்கியதைத் துப்பும் வேலையை கச்சிதமாகச் செய்வதால் இடமும் கிடைத்துவிடுகிறது. இதில் அறிவிற்கு என்ன வேலை?

பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் இது போன்று சிறு வயதில் இருந்தே பயிற்சியெடுக்க வாய்ப்பில்லாமல் போவதாலும் இங்கு இடஒதுக்கீடு இல்லாதபடியாலும் அவர்கள் இங்கு சேர்வதைப்  பற்றி யோசிப்பதில்லை. ஆக தான் வாழும் சமூகம் சமூகத்தில் காணப்படுகிற ஏற்றத்தாழ்வுகள் போன்ற எதையும் பார்க்காத/பார்க்க விரும்பாத இவர்களின் குருட்டுக் கண்களுக்கு பணத்தின் இருப்பு மற்றும் அதன் மீதான அதீத காதல் மட்டுமே தேவை என்பதாக கற்பிக்கப்படுகின்றன. குழந்தைகளும் பிற்காலத்தில் அதுவாகவே ஆகின்றனர். எனவே இங்கு சேர்வதற்கான தகுதி திறமை எல்லாம் சாதி வர்க்க ரீதியில் அமைந்தது என்பதையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.  அதனால் தான் நன்றாகச் சம்பாதிக்கப் கூடிய, சந்தையில் அதிக விலைபோகும் ஐ.ஐ.டி பொலிகாளைகளை இவ்விளம்பரம் கோருகிறது.

இந்த ‘அறிவுஜீவி’களின் யோக்கியதையை, இச்சமூகத்தில் குறைந்த பட்சம் தனது இருத்தலுக்கான போராட்டத்தைக் கூட செய்ய லாயக்கற்ற குப்பைத் தொட்டிகளாக விளங்குவதன் மூலம் காணலாம். தன் கூடப் படித்த சக மாணவன் தற்கொலை செய்து கொள்வதைப் பார்த்து கண்டும் காணாமல் வாய் மூடி ஊமைகளாய் இருக்கும் மாணவர் சமூகத்தை படைப்பதுதான் இந்த ஐ.ஐ.டிக்கள். சமீப காலங்களில் ஐ.ஐ.டிக்களில் நடைபெற்ற மாணவர்களின் தற்கொலைகளும், சென்ற மாதம் இந்திய அறிவியல் கழகத்தில் (IISC- Bangalore) மன உளைச்சல் மற்றும் தனிமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட பராக் சதாலே என்ற பேராசிரியரைப் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

அதீத மன உளைச்சல், தனிமை என்றால் சாவு ஒன்றுதான் தீர்வு போல, குறைந்தபட்சம் அதை எதிர்த்துப் போராடக்கூட வக்கில்லாமல் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்கின்றனர். இவர்கள் இச்சமூகத்தின், இக்கல்விமுறையின் பலிகடாக்கள், அதன் நேரடித் தோல்வியால் ஏற்பட்ட விளைபொருட்கள், ஒட்டுமொத்த வினைகளின் எதிர்வினைகள்.

இது போன்ற விளம்பரங்கள் நமக்கு அதிர்ச்சியூட்டுவனவாக இருந்தாலும் இவ்வகையறா விளம்பரங்கள் மேலை நாடுகளில் பரவலாகக் காணமுடியும். அங்கு அதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டுதான் வருகின்றன. டிசைனர் விந்தணு, டிசைனர் பேபி போன்ற மாய்மால வார்த்தைகள் அங்கு பிரபலம். பிறக்கப் போகும் உங்களுக்கான குழந்தைகளை உங்கள் விருப்பப்படி டிசைன் செய்து கொள்ள வேண்டுமா? நல்ல அறிவுடன், பச்சை நிறக்கண்களுடன், அழகான முடியுடன், பளிச்சென்ற நிறத்துடன், உயரமாக வேண்டுமா ! இது போன்ற சொற்களைத் தாங்கிய விளம்பரங்களும் சர்வ சாதாரணமே.

ஆனால் நமக்கு இது போன்ற விளம்பரங்கள்  வருவது புதியதாயினும் இலை மறை காயாக அத்தகைய விழுமியங்கள் நம் சமூகத்தில் காலங்காலமாகவே இருந்து வருகின்றன. வெகு நாட்கள் மூடியுள்ள முகத்திரையால் பயனேதும் இல்லை என்பதால் தனது போலி முகத்தை கிழித்தெரிந்துள்ளது அவ்வளவே! தன்னை அடையாளப்படுத்துவதன் மூலம் மக்களின் பொதுப்புத்தியினூடாக இது போன்ற செயல்கள் தவறானதல்ல என்றும், அது தனிமனிதர் விருப்பு வெறுப்பைச் சார்ந்தது என்றும் நிலைநிறுத்தப்படுகிறது.

ஏற்கனவே பல ஏற்றத்தாழ்வுள்ள, அசமத்துவப் படிநிலைகளைக் கொண்ட இச்சமூகம் இது போன்ற வீரியமிக்க ஒட்டுரக டிசைனர் குழந்தைகளை உருவாக்கும் பட்சத்தில் (உயிரித் தொழில் நுட்பம் மூலமாக சாத்தியமே என்கிறார்கள் அறிஞர்கள்) அது இச்சமூகத்தில் தனக்கான முரண்பாடுகளை அதிகமாக ஏற்படுத்திக்கொள்ளுமே ஒழிய அதனால் வேறெதுவும் பயனில்லை. இது போன்ற டிசைனர் குழந்தைகள் சமூக, பொருளாதார மற்றும் அறிவுத்தளங்களில் தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொண்டு அசமத்துவத்தின் புதிய படிநிலையில் விட்டு விடும் அபாயமும் உள்ளது. ஆனால் இங்கு விந்தை தானமாகக் கொடுப்பவரின் பின்புலம் பற்றி அறிய சட்டம் இடம் கொடுக்காது என்ற போதிலும் நிலவுகின்ற சட்டத்தின் ஓட்டைகளின் மூலம் தாங்கள் விரும்பும் டிசைனர் விந்துவைப் பெற சாத்தியம் இருக்கவே செய்கிறது. டிசைனர் குழந்தைகள் தங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத பட்சத்தில் அப்பெற்றோர்களால், குழந்தைகள் முற்றிலும் நிராகரிக்கப்படுவதற்கான முகாந்திரங்களும் உள்ளது.

மரபணு தொழில்நுட்பம் (Genetic Engineering)  இல்லாமல் இயற்கையாகவே டிசைனர் விந்துக்களைக் கொண்டுள்ளதாகக் கற்பிக்கப்படும் பார்ப்பன ஐ.ஐ.டியினர், பொலிகாளைகளாக மாறும்பட்சத்தில், வீரியமற்ற இம்’மலட்டு’ச்சமூகம் மேலும் மலடாகி போகுமே அன்றி அறிவார்ந்த சமூகமாக மலர முடியாது.

அறிவும், திறனும், சமூக பிரக்ஞையும் சமூக நடைமுறைகளில்தான் மலருமே அன்றி டிசைனர் விந்துவால் உருவாக்க இயலாது. உடல் ஆரோக்கியத்தின் மேம்பட்ட தன்மையை வேண்டுமானால் டிசைனர் விந்து கொண்டு வரலாம். ஆனால் சமூக ஆரோக்கியத்தை இது வழங்கி விடாது. மூதாதையரின் உடற்கூறுகளைத்தான் மரபணு தாங்கி வருகிறதே அன்றி அவர்களின் சமூக வரலாற்று உணர்வை அல்ல. அது வர்க்கப் போராட்டம் எனும் உலைக்களத்தில் வடிக்கப்படும் ஒன்று.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: