கர்நாடகா க்கான தொகுப்பு

பாரதீய ஜ(ல்சா) பார்ட்டி

Posted in பகுக்கப்படாதது with tags , , , , , , on மார்ச் 19, 2012 by குட்டகொழப்பி

 

  ஒருமுறை ரெண்டு முறை அல்ல பல முறை கீழே விழுந்து அம்பலப்பட்டுப் போனாலும் வடிவேலு கணக்காக துடைத்துவிட்டு போகும் பெருந்தன்மை இக்கட்சியினரைத் தவிர மற்றவருக்கு குறைவே.

கர்நாடக மாநில சட்டசபையான விதான சவுதாவில் அன்றைய தினம் நடந்த விவாதத்தில் மாநிலத்தில் நிலவும் வறட்சியைப் பற்றியும், சனவரி மாதம் சிந்தகி என்ற பகுதியில் பாகிஸ்தான் கொடியேற்றிய ஆர்.எஸ்.எஸ் காலிகளைப் பற்றியும்,  கேரள அரசு போல சுற்றுலாவின் மூலம் பெரிய அளவில் கல்லாக்கட்ட  அம்மாநில அரசால் உடுப்பி மாவட்டத்தின் செயிண்ட் மேரிஸ் தீவில் நடத்திய ரேவ் பார்ட்டி  (மிதமான சத்தத்தில் புகைமூட்டத்துடன் ஆரம்பித்து, நேரம் செல்ல செல்ல வெறியூட்டக்கூடிய இரைச்சலுடன் பலான விஷயங்களும் நடக்கும் நிகழ்வு) பற்றியும் விவாதித்துக் கொண்டிருந்த பொழுதுதான் அமைச்சர்களின் அக்கப்போரும் நடந்திருக்கிறது.

ரேவ் பார்ட்டியில் நடக்கும் பலான விஷயங்களை, (அதாவது பார்ட்டியில் என்னவெல்லாம் செய்வார்கள் கடைசியில் எப்படி முடியும்) பற்றி தெரிந்து கொள்ளவே  அந்த ஆபாசக்காட்சியைப் பார்த்ததாகச் சொல்கிறார்கள்.சட்டமன்றத்தில் ஆபாசக் காட்சிகள் பார்த்து கையும் களவுமாக மாட்டிக் கொண்டவர்கள் முதலில் மறுத்தாலும் இறுதியில் பெருந்தன்மையாக மக்களின் விருப்பத்தின்படி ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளனர்.

இது போன்ற புகார்கள் வருவது பாரதீய ஜல்சா பார்ட்டிக்குப் புதிதல்ல என்பது உலகறிந்ததே. எடியூரப்பாவின்  நெருங்கிய நண்பரும் முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் அமைச்சரான ஹலப்பா, ஷிமோகா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது தனது நண்பரான வெங்கடேசமூர்த்தியின் வீட்டில் விருந்தினராகத் தங்கியிருக்கிறார். இரவில் நெஞ்சு வலி வந்தபொழுது மாத்திரை வாங்கிவரச் சென்ற நண்பர் திரும்பி வருவதற்குள் சில்மிஷம் செய்ய ஆரம்பிக்க நண்பனால் கையும் களவுமாகப் பிடிபட்டார். இறுதியில் முயற்சி வீணாகிப் போக, இலக்கையடையாமல் மனமுடைந்த ஹலப்பா பதவியை ராஜினாமா செய்தார்.

அடுத்து எடியூரப்பாவின் அதிகாரப்பூர்வமற்ற செய்தித் தொடர்பாளரும் பல சமயங்களில் அவருக்கு ஆபத்பாந்தவனாக விளங்கிய திருவாளர் ரேணுகாச்சார்யாவின் லீலைகளும் பட்டியலிடமுடியாதவை. ஷிமோகாவில் உள்ள பாபுஜி ஆயுர்வேத மருத்துவமனையில் செவிலியாக வேலைசெய்து கொண்டிருந்த ஜெயலஷ்மிக்கும் இவருக்கும் இருந்த தொடர்பு அம்மாநில அரசியல் மட்டத்தில் அனைவருக்கும் பரிச்சயம். புதிய மருத்துவமனை கட்டுவதில் ஏற்பட்ட பிணக்கால், இருவரும் நெருக்கமாயிருந்த புகைப்படத்தைக் காட்டி மிரட்டியிருக்கிறார் ஜெயலஷ்மி. இதைக் கண்டு சற்றும் அசராத  அவர் தன் அரசியல் பலத்தால் செய்தியை இருட்டடிப்பு செய்ய நினைக்க, இறுதியில்  சாதாரண எம்.எல்.ஏ வான அவரை  அமைச்சராக்கி அழகு பார்த்தார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா.

ஆனால் இப்பொழுதோ அமைச்சர்களை கவுரவிக்க முடியாமல் போன முதல்வர் சதானந்த கவுடாவிற்கு இக்கோழைச்ச்செயல் கோபத்தை ஏற்படுத்தியிருக்கூடும். போயும் போயும் எல்லாரும் பார்க்கும் ஆபாசக் காட்சியைப் பார்த்து பதவி போவதற்கு, ப்ராக்டிகலாகவே செய்து பார்த்து பதவியைக் கொடுத்திருக்கலாம் என்று நினைத்திருக்க்க் கூடும். தனித்துவமான கட்சி (party with difference)  என்று தங்களைப் பறைசாற்றிக்கொள்ளும் இவர்கள் முதன்முறையாக தாங்கள் சொல்வதெல்லாம் உண்மை, அதைச் செய்தும் காட்டுவோம் என்று நிரூபித்துள்ளனர். இருக்காதா பின்ன, பள்ளிகளில் காமக்கதையான ராமாயணத்தை போதிக்கவேண்டும் என்று கூறுபவர்கள் சட்டசபையில் அதற்கான ஒத்திகையில் ஈடுபடுவதில் தவறென்ன இருக்கிறது.

ராம சேனா வானரங்கள் எங்கு போய் ஒளிந்து கொண்டார்கள்? காதலர் தினங்களில் லவ் ஜிகாதிகளாக மாறிவிடும் நேரங்களிலும், நள்ளிரவில் நடக்கும் ரேவ் பார்ட்டிகளிலும் இந்து கலச்சாரத்தைத் தேடிய இவர்கள், இந்து கலாச்சாரம் கிழிந்து நிர்வாணமாகி தன்னை அப்பட்டமாகிக் காட்டிக்கொண்டிருக்கும் இந்நேரம் இவர்களின் மௌனக்கலாச்சாரம் கவலையளிக்கவே செய்கிறது. ஜல்சா பார்ட்டியோ அல்லது அதன் மகளிரமைப்போ பிங்க் ஜட்டியை பரிசளிக்கலாம் என்ற பயத்தில் வானரங்கள் கைவிட்டிருக்கலாம். ஒருவேளை மும்மூர்த்திகள் பார்த்தவை சுதேசியா அல்லது விதேசியா எனக்கண்டறியும் முயற்சியில் இருக்கலாம். வெளிநாடுகளில் புகழ்பெற்ற ரேவ் பார்ட்டி பற்றித்தான் இவர்கள் அவ்வீடியோவில் ஆராய்ச்சி செய்தார்கள் என்றால் அவ்வீடியோ கண்டிப்பாக விதேசி வகையறாவகத்தான் இருக்க வாய்ப்புள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதைப் பற்றி வானரங்களிடம் தெரிவிக்கவேண்டிய கடமை நமக்குள்ளது.

சட்டசபையில் ஆபாசமாகக் கத்திப்பேசுவது, நாக்கைக் கடித்துக் கொண்டுப் பேசுவது, நாற்காலியைத் தூக்கியெறிவது, காகிதத்தைக் கிழித்தெறிவது, மைக்கை உடைப்பது, ஆழ்ந்த சயனத்தில் இருப்பது, ஆளாளுக்கு அடித்துக் கொள்வது, மாறி மாறி வேஷ்டி புடவையை உருவிக்கொள்வது என எவ்வளவோ செய்தாகிவிட்டது. காலத்திற்கேற்ப பழைய  வெர்ஷன் மாறி புதிய வெர்ஷன் வேண்டுமென்பதால் ஆபாச வீடியோவில் ஆரம்பித்து இனி வரும்காலங்களில் செய்முறைத் தேர்வையும் நேரடியாக நிகழ்த்தி புதிய சரித்திரம் படைக்கலாம்.

தொடைகளுக்கிடையே மட்டும் தான் இவ்வுலகமுள்ளது என்ற  நினைப்பில் சர்வகாலமும் லயித்திருப்பதற்கும் ஒரு திறமை வேண்டுமல்லவா. இவ்வுலகத்தை அகண்ட பாரதமாக்கும் முயற்சியில் இப்பொழுது தொடைகளுக்கிடையில் இருந்து துவங்கியிருக்கிறார்கள். அகண்ட பாரதத்திற்கான தேடலில் சில மாற்றங்கள் வருமென்றாலும் அதைப் பெரிது படுத்தமுடியாது. போர்த்தந்திரமானாலும் செயல்தந்திரமானாலும் இறுதியில் அகண்டபாரதம் ஒன்றே இலக்காவதால் அதை எங்கு வேண்டுமானாலும் தேடலாம். ரேணுகாச்சார்யா ஜெயலஷ்மியிடமும், ஹலப்பா அவருடைய நண்பரின் மனைவியிடமும், இம்மும்மூர்த்திகள் கைப்பேசியின் பலான படங்களினூடாகவும் தேடியிருக்கின்றனர். இடமும் பொருளும் மாறினாலும் தடைகளைத்தாண்டி அகண்ட பாரதத்தையடைய எத்தனிக்கும் இவர்களின் முயற்சிகள் பாராட்டப்படக் கூடிய ஒன்றே.

கடவுளின் வேலையே அரசின் வேலை (Governments work is God’s work) என்ற முழக்கத்துடன் கம்பீரமாக எழுந்தருளியிருக்கும் கர்நாடக சட்டமன்றக் கட்டிடமான விதான சவுதாவில் அதை நிரூபிக்கும் வகையில் ராம லீலைகளில் ஈடுபட்டு வரும் அவ்வரசின் அடிப்பொடி மந்திரிகள் மேலும் லீலைகளில் ஈடுபட்டு ராம ராஜ்ஜியத்தை அடைய எல்லாம் வல்ல அந்த ராமனை வணங்குவோம்.

சில வருடங்களுக்கு முன்பு “ யாரெல்லாம் இந்துத்வாவிற்கு எதிராகப் பேசுகிறார்களோ அவர்கள் தலை துண்டிக்கப்படும்” என ஆர்ப்பரித்த ரேணுகாசவுத்திருக்கு ஹலப்பா விஷயமும் தெரியும், மும்மூர்த்திகளின் லீலைப் பற்றியும் தெரியும். அதுசரி………!!!!!! இந்து மதத்திற்கு எதிரான இக்கலாச்சாரச் சீர்கேட்டில் ஈடுபட்ட இவர்களின் தலைமட்டும்தான் துண்டிக்கப் படவேண்டுமா…….அல்லது……??