கம்யூனிசம் எனும் பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்ட இரும்புப் பெண்மணி – அலெக்ஸான்ட்ரா மிகைலோவ்னா டெமன்டோவிச் கொல்லொன்டை


கீழைக்காற்று பதிப்பகம் வெளியிட்ட கம்யூனிசமும் குடும்பமும் என்ற நூலைப் பற்றியான அறிமுகம் செய்யலாம் என்று நினைத்திருக்கையில் குருத்து தன் வலைப்பதிவில் பதிந்துவிட்டார்.

நூலறிமுகத்திற்கு கீழேயுள்ள படத்தைச் சொடுக்கவும்.

இந்நூலை எழுதிய தோழர் அலெக்சான்ட்ரா பற்றிய சில குறிப்புகள்.

அலெக்ஸான்ட்ரா கொல்லொன்டை என்றழைக்கப்படுகின்ற அலெக்ஸான்ட்ரா மிகைலோவ்னா டெமன்டோவிச் கொல்லொன்டை 31-03-1872 அன்று ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் ஜார் மன்னருக்கு சேவை புரியும் ஒரு மேட்டுக்குடி குடும்பத்தில் பிறந்தவர். இளமையிலேயே பல மொழிப்புலமை பெற்ற இவர் தன் பத்தொன்பதாவது வயதில் விளாடிமிர் என்ற இராணுவ வீரரைத் திருமணம் செய்தார், விரைவிலேயே அது ஒரு அடிமை வாழ்க்கை என்பதை உணர்ந்த அலெக்ஸான்ட்ரா தன்னுடைய திருமண வாழ்வை முறித்தார். 1894 களில் ரஷ்ய தொழிற்சாலைகளில் தொழிலாளிகளின் அவல வாழ்நிலையைக் கண்ட அவர், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தெருக்களில் உள்ள தொழிலாளர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதில் இருந்து தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார், பிற்பாடு மார்க்சிய சித்தாந்தத்தில் முழு ஈடுபாடு கொண்டதன் காரணமாக சமூகக் குடியரசுக் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.

ரஷ்யாவில் ஜாரிய அடக்குமுறையினால் தவித்த ஃபின்லாந்து மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்த இவர் ’ஃபின்லாந்தில் உழைக்கும் வர்க்கத்தின் நிலை’ என்ற புத்தகத்தை எழுதினார். அதன் நீட்சியாக ரஷ்ய தொழிற்சாலைகளில் உள்ள பெண் தொழிலாளிகளின் உரிமைக்காகவும், சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் போராடினார். 1914 வரை மென்ஷ்விக் கட்சியில் இருந்தார், அதன் பிறகு 1915 ல் போல்ஷ்விக் கட்சியில் இணைந்த இவர் அன்றைய ரஷ்ய சோஷலிசக் கட்சியின் மிகப் பெரிய புரட்சியாளர் மற்றும் பெண் விடுதலைப் போராளியாக தன்னை அர்பணித்துக் கொண்டார். 1917 களில் ரஷ்யக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (போல்ஷ்விக்) முதல் பெண் மத்தியக்கமிட்டி உறுப்பினராகவும், அக்டோபர் புரட்சிக்குப் பிறகு லெனின் தலைமையில் ஏற்பட்ட சோஷலிச அரசின் சமூக நலத்துறை கமிசாராகவும் இருந்தவர். இக்காலகட்டத்தில் (1920) இவர் எழுதிய முக்கியமான நூல்தான் ‘ கம்யூனிசமும் குடும்பமும் – உற்பத்தியில் பெண்களின் பங்கும் குடும்பத்தில் அதன் தாக்கமும் ‘, இது மட்டுமல்லாமல் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஏடுகளிலும் (ப்ராவ்தா) இவர் தனது புரட்சிகர எழுத்துக்களைக் கொண்டு சென்றார்.

பிறகு ரஷ்யாவில் தொழிற்சங்கங்களை அணுகுவதில் லெனினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அலெக்ஸான்டர் ஷ்லியாப்னிகோவுடன் ( மத்தியக்கமிட்டி உறுப்பினர் & தொழிலாளர்களுக்கான கமிசார்) சேர்ந்து போல்ஷ்விக் கட்சியை விமர்சித்து ‘உழைப்பாளிகளின் கண்டனம்’ என்ற துண்டுப்பிரசுரத்தை வினியோகித்தார். 1922 ல் கட்சிக்குள் குழுவாதம் / பிரிவினைவாதம் இருந்தால் புரட்சியை சாதிக்க முடியாது என்ற காரணத்தைக் கூறி அவரைக் கட்சியில் இருந்து நீக்கினார் லெனின், ஆயினும் ஸ்டாலின் காலகட்டங்களில், நார்வே (1923-1925 & 1927-1930), மெக்சிகோ (1925-1927), ஸ்வீடன் (1930-1945) போன்ற நாடுகளுக்கு நல்லெண்ணத்தூதுவராக நியமிக்கப்பட்டார். தன் கருத்துக்களை மிகவும் துணிச்சலாக வைக்கும் தைரியம் கொண்டவராதலால் ஒளிவுமறைவின்றி செயல்பட்டார், ஸ்டாலினால் 1934 – 1939 காலகட்டங்களில், ஆரம்பத்தில் இருந்த பல மத்தியக் கமிட்டி உறுப்பினர்களும் துரோகிகளாகக் கண்டறியப் பட்டு களையெடுக்கப்பட்ட சமயத்தில் கூட இவரின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை,. கடைசியாக 1945 ல் ஸ்வீடனில் நல்லெண்ணத் தூதராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு ரஷ்யாவிற்கே வந்து குடியேறினார், உடல் நலக் குறைவினால் 9-03-1952 ல் இறந்தார். உலக சரித்திரத்தில் வெளிநாடுகளுக்கு தூதுவராக செயல்பட்ட முதல் பெண் என்ற பெருமைக்குறியவர்.

ரஷ்யா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் பெண்களுக்காக குரல் கொடுத்த அலெக்ஸான்ட்ராவின் அன்றைய எழுத்துக்கள், இன்றும் இச்சமூகத்தில் பெண்கள் பெற வேண்டிய சமூக,அரசியல் மற்றும் பொருளாதார விடுதலையை நினைவுப்படுத்துகிறது, அதைப் பெறுவதற்கான போராட்டத்தில் நமது கடமையையும் உரத்துக் கூறுகின்றது.

3 பதில்கள் -க்கு “கம்யூனிசம் எனும் பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்ட இரும்புப் பெண்மணி – அலெக்ஸான்ட்ரா மிகைலோவ்னா டெமன்டோவிச் கொல்லொன்டை”

  1. ungaludaiya vimarsanam puthakathai padikum arvathai thoondukirathu

    • நன்றி பாலு…

      புத்தகம் கீழைக்காற்றுப்பதிபகத்தில் கிடைக்கிறது………வாங்கிப்படியுங்கள் நண்பர்களுக்கும் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள்.

  2. கொலந்தாய் பற்றிய சுருக்கம் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

    புத்தக சந்தையில் வாங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு அறிமுகம் என்ற அளவில் சுருக்கமாக எழுதினேன். நீங்கள் படித்துவிட்டு, ஒரு விமர்சனமாக எழுதலாமே! எதிர்பார்க்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: